ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கட்சியில் வேட்பாளர் விசி சந்திரகுமார் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இந்த வெற்றியை திமுகவினர் கொண்டாடி வரும் நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையிடம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஏராளமானோர் வாக்கு செலுத்தாத நிலையில் நோட்டாவிலும் அதிக அளவில் வாக்குகள் விழுந்துள்ளது. அதன் பிறகு பெரியாரை தாழ்த்தி பேசினால் வாக்குகள் குறையுமோ அல்லது பெரியாரை புகழ்ந்து பேசினால் வாக்குகள் உயருமோ என்றெல்லாம் கிடையாது.

தற்போது காலம் மாறிவிட்ட நிலையில் பெரியாரைப் பிடித்தவர்களும் இருக்கிறார்கள் பிடிக்காதவர்களும் இருக்கிறார்கள். பெரியார் பற்றி சீமான் உள்ளிட்டோர் ஒரு வாதத்தை முன் வைத்தார்கள். ஆனால் அந்த வாதம் கொஞ்சம் கூடுதலாக இருந்ததோ என்று தோன்றுகிறது. சீமான் கொஞ்சம் ஓவராகத்தான் பேசி விட்டார். அதுவும் ஒரு மாதிரி ஆபாசமாக போய்விட்டது. பெரியாரைக் கடந்து தமிழ்நாடு சென்றுவிட்ட நிலையில் பெரியாரைப் பற்றி பேசியதால் தான் நாம் தமிழர் கட்சியினர் தோல்வியடைந்தார்கள் என்று திமுகவினர் நினைத்தால் அவர்களுக்கு அரசியல் தெரியவில்லை என்று தான் சொல்வேன். மேலும் திமுகவுக்கு கிடைத்த வாக்குகள் பெரியாரால் வந்த வாக்குகள் என்று கூறினால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறினார்.