கோயம்புத்தூர் மாவட்டம் புலியகுளம் அருகே ஒரு கோவில் உள்ளது. இங்கு ஒரு பாம்பு வந்ததால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அப்துல் ரகுமான் மற்றும் உமா மகேஸ்வரி ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அங்கு விரைந்து வந்து பாம்பை பிடித்தனர். அதன் பிறகு அந்த பாம்பை கோவை வனச்சரக வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் உமா மகேஸ்வரி மற்றும் அப்துல் ரகுமான் இருவரும் முதலில் பாம்பை பிடித்த போது அதை கையில் வைத்து வீடியோ வெளியிட்டுள்ளனர். அவர்கள் இதுபோன்ற பாம்பை அடித்துக் கொள்ள கூடாது எனவும் எங்களிடம் சொன்னால் நாங்கள் பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விடுவோம் என்றும் விழிப்புணர்வு வீடியோவாக அதை வெளியிட்டிருந்தனர்.

இருப்பினும் அது பாதுகாக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பாம்பு என்பதால் அதை கையில் பிடிக்க அனுமதி கிடையாது. இதன் காரணமாக வனத்துறை அதிகாரிகள் அப்துல் ரகுமான் மற்றும் உமா மகேஸ்வரி மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர்‌. மேலும் அந்த பாம்பு இந்தியன் ராட் ஸ்னேக் இனத்தைச் சேர்ந்த பாதுகாக்கப்பட்ட பாம்பு என்பதால் வனத்துறை அனுமதி இன்றி  அதைப் பிடித்து வீடியோ வெளியிட்ட காரணத்திற்காக அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.