
கடந்த ஜூன் மாதம் ஐந்தாம் தேதி போயிங் நிறுவனத்தின் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் சென்றனர். அவர்கள் எட்டு நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்புவதற்கு திட்டமிடப்பட்டது.
ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு உள்ளிட்ட தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் சுனிதா வில்லியம்ஸ் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டதால் அவர்கள் விண்வெளியிலேயே இருக்கின்றனர். அவர்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் பூமிக்கு திரும்புவார்கள். அமெரிக்க விண்வெளி கழகமான நாசா ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான க்ரூ டிராகன் விண்கலம் மூலம் சுனிதாவும் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இது மட்டுமில்லாமல் போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் ஆட்கள் இல்லாமல் பூமிக்கு கொண்டு வரப்படும் எனவும் அறிவித்தனர். அதன்படி இந்திய நேரப்படி நேற்று முன்தினம் மாலை புறப்பட்டு நேற்று காலை 9:30 மணிக்கு நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள ஒயிட் சேன்ட்ஸ் ஹார்பரில் தரையிறங்கியது. பூமியை நெருங்கிய போது விண்கலத்தில் இருந்து பாராசூட் விரிவடைந்ததால் சுனிதா வில்லியம்ஸ் புட்ச் வில்மோர் இல்லாமல் விண்கலம் திரும்பி இருக்கிறது. தற்போது விஞ்ஞானிகள் தொழில்நுட்ப கோளாறு பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்