அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியாவில் உள்ள அமோக் கவுண்டில் ஒரு பல்பொருள் அங்காடி செயல்பட்டு வந்துள்ளது. இந்தக் கடையில்  இந்திய தொழிலாளியான பிரதீப்குமார் படேல்(56) என்பவர் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் 20 ஆம் தேதி அதிகாலை 5.30 மணி அளவில் வழக்கம் போல பிரதீப்குமார் மற்றும் அவரது மகள் இருவரும் கடையை திறந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.

இதில் கடையில் இருந்த பிரதீப்குமார் மற்றும் அவரது மகள் இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போது, பிரதீப் குமார் கடையில் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார். அவரது மகள் துப்பாக்கி காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அப்பெண்ணும் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு  அப்பகுதியில் விசாரணை நடைபெறுகிறது. இந்த விசாரணையில் சந்தேகத்தின் பேரில் ஜார்ஜ் பிரேசியர் டெவான் (44) என்பவர் கைது செய்யப்பட்டு அஹமத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால் துப்பாக்கி சூட்டிற்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை. மேலும் இச்சம்பவம் குறித்து கடையின் உரிமையாளரான பரேஸ்  படேல்  கூறியதாவது, “என் அண்ணன் மனைவியும், அவருடைய தந்தையும் தான் அந்த நேரத்தில் கடையில் இருந்துள்ளார்கள். ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார். எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை” என மிக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.