
சென்னை விமான நிலையத்தில் புயல் தாக்கத்தை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் புயல் கரையை கடக்கும் வரை விமான நிலையத்தில் கண்காணிப்பு பணிக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழு தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலின் போது விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விமானங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக புயல் தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு விமானங்களை பெங்களூரு, ஹைதராபாத், திருச்சி, கோவை மற்றும் மதுரை போன்ற விமான நிலையங்களுக்கு கொண்டு சென்று நிறுத்த அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேசமயம் புயல் முழுமையாக தரையைக் கடந்து சக நிலைக்கு திரும்பும் வரை எந்த ஒரு விமானமும் இயக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றும் நாளையும் பயணத்தை மேற்கொள்ளும் விமான பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களிடம் தொடர்பு கொண்டு தங்களுடைய பயணத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.