
சென்னை திருவான்மியூர் பகுதியில் கவுதம் என்பவர் சைதாப்பேட்டை கோர்ட்டில் வக்கீலாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் திருவான்மியூர் திருவள்ளூர் சாலையில் அவருடைய நண்பர்கள் சிலருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் கௌதமை திடீரென்று சரமாரியாக அறிவாளால் வெட்டினர். இதனை சற்றும் எதிர்பார்க்காத கௌதம் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் அந்த கும்பல் விரட்டி விரட்டி கௌதமை ஓட ஓட சரமாரியாக வெட்டியுள்ளனர். அதன் பிறகு அங்கிருந்து அந்த கும்பல் தப்பிச் சென்ற நிலையில் கௌதம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவான குற்றவாளிகளை போலீசார் அடையாளம் கண்டனர். இதனை தொடர்ந்து கண்ணகி நகரை சேர்ந்த கமலேஷ் (27), அவருடைய நண்பர்களான கொட்டிவாக்கம் நித்தியானந்தம் (27), பெரும்பாக்கம் பார்த்திபன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கௌதமும் கமலேஷும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
கொட்டிவாக்கம் இளங்கோ நகரில் ஒன்றாக வசித்து வந்த நிலையில் உயிருக்கு உயிராக பழகிய இவர்கள் கௌதம் திருவான்மியூர் சென்ற பிறகு நடவடிக்கை வேறு விதமாக மாறி உள்ளது. குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களோடு அவர் பழகியுள்ளார். பாலவாக்கத்தை சேர்ந்த மதன் குமார் என்ற கமலேஷ் உறவினர் பிரபுவை குடிபோதையில் தாக்கினார். இதனை தட்டிக் கேட்ட கமலேசுக்கும் கௌதமுக்கும் சண்டை ஏற்பட்டது. இதனால் கௌதம் மீது வருத்தமும் கோபமும் ஏற்பட்ட கமலேஷ் அவரை போட்டுத் தள்ள முடிவு செய்து நண்பர்களோடு சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.