
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த அரசு மற்றும் காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகத்தில் பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதை உறுதிப்படுத்தும் வகையில், இன்று (மார்ச் 25) காலை சென்னையில் ஒரே மணிநேரத்தில் பல்வேறு இடங்களில் சம்பவங்கள் நடந்துள்ளன.
காலை 6 மணி முதல் 7 மணி வரை திருவான்மியூர், பெசன்ட் நகர், சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி ஆகிய பகுதிகளில் மொத்தமாக 8 செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு இடத்திலும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், நடைபாதையில் சென்ற பெண்களின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்று தப்பியுள்ளனர். இந்த தாக்குதல்களில் சுமார் 20 சவரனுக்கும் அதிகமான நகைகள் பறிக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளித்ததையடுத்து, காவல்துறையினர் அதே இடங்களிலுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகளை விரைவில் பிடிக்கும் வகையில் விசாரணை தொடர்வதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தொடர்ச்சியான சம்பவங்கள், பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளன.