
இந்திய மாணவர்கள் பலர் தங்கள் கல்விக்காக வெளிநாடு சென்று தங்கி படித்து வருகின்றனர். இதில் கடந்த 5 வருடங்களில் விபத்து, உடல்நலக் குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் வெளிநாடுகளில் தங்கி படிக்கும் மாணவர்கள் தொடர்பாக ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு வெளியுறவு துறை இணைஅமைச்சர் கீர்த்திவர்தன் சிங் பதில் அளித்தார் .இது குறித்து அவர் கூறியதாவது 5 வருடங்களில் இந்திய மாணவர்கள் பலர் வெளிநாடுகளுக்கு சென்று படித்து வருகிறார்கள். இவர்களில் கடந்த 5 வருடங்களில் மட்டும் 633 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி அமெரிக்காவில் 108 பேரும், பிரிட்டனில் 58 பேரும், ஆஸ்திரேலியாவில் 57 பேரும் , ரஷ்யாவில் 37 பேரும் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து உக்ரைனில் 18 பேர் உயிரிழந்து உள்ளனர். அதோடு ஜெர்மனியில் 24 பேரும் கிர்கிஸ்தான், ஜார்ஜியா மற்றும் சைப்ரஸ் நாடுகளில் 12 பேரும் சீனாவில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதேபோன்று கடந்த 5 ஆண்டுகளில் 19 பேர் தாக்குதல் சம்பவங்கள் உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதில் கனடாவில் 9 பேரும், அமெரிக்காவில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் அமெரிக்காவில் படித்து வந்த 48 பேர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் அதற்கான காரணத்தை அமெரிக்கா கூறவில்லை என்றும் கூறியுள்ளார்.