கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நடந்த திடீர் சம்பவத்தில் 4 வயது சிறுவன் படுகாயம் அடைந்த சம்பவம் பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கோயம்புத்தூரைச் சேர்ந்த மேத்யூஸ், புவிதா மற்றும் இவர்களது மகனான ஜெயின்சன் ஆகியோர் S7 ரயில் பெட்டியில் பயணம் செய்தபோது இந்த சம்பவம் நடந்தது. சிறுவனை கீழ் படுக்கையில் தூங்க வைத்துவிட்டு, பெற்றோர்கள் எதிரே அமர்ந்து கொண்டிருந்தனர்.

ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது, ஜெயின்சன் படுத்திருந்த கீழ் படுக்கைக்கு மேலிருந்த நடுப்படுக்கை திடீரென அறுந்து விழுந்தது. இதனால் கீழே உறங்கிக் கொண்டிருந்த ஜெயின்சன் படுகாயம் அடைந்தார். உடனடியாக சிறுவனின் பெற்றோரும் அருகில் இருந்த பயணிகளும் நடுப்படுக்கையை தூக்கி சிறுவனை மீட்டனர், இருப்பினும், சிறுவனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

தகவல் கிடைத்தவுடன் ரயில் டிக்கெட் பரிசோதகர், மதுரை ரயில் நிலையத்திற்கு தகவல் அனுப்பினார். ரயில் அங்கு வந்ததும், தயாராக இருந்த மருத்துவ குழுவினர் சிறுவனை பரிசோதனை செய்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். சிறுவனின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மதுரை மருத்துவமனையில் சிறுவனுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.