சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் மஸ்தூரி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் பீர் குடிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பள்ளியில் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்று சமீபத்தில் நடைபெற்ற போது அதில் மாணவிகள் கலந்து கொண்டு பீர் மற்றும் குளிர்பானங்களை குடித்துள்ளனர்.

அங்குள்ள ஒரு மேஜையில் பீர் பாட்டில்கள் மற்றும் நொறுக்கு தீனிகள் இருந்த நிலையில் அவற்றை புகைப்படம் எடுத்ததோடு மாணவிகள் அதனை ரீல்ஸ் வீடியோவாக எடுத்தும் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்ட போது தாங்கள் பீர் குடிக்கவில்லை எனவும் வெறுமனை கொண்டாட்டத்திற்காக பீர் பாட்டில்களை கையில் வைத்தபடி உயர்த்தி காட்டினோம் என்றும் கூறியுள்ளனர்.

இந்த கொண்டாட்டத்தின் போது ஆசிரியர்களும் உடன் இருந்ததாக கூறப்படும் நிலையில் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் முதல்வர் மற்றும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பீர் குடித்த மாணவிகளின் பெற்றோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட இருக்கிறது. இது ஒரு மிகப்பெரிய தீவிரமான விஷயம் என்பதால் விசாரணைகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.