சென்னை வியாசர்பாடி பகுதியில் அண்ணாதுரை (44) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜாஸ்மின் ஜஸ்டினா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்கள். இதில் அண்ணாதுரைக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த அவருடைய மனைவி பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் அண்ணாதுரை தன் மனைவியிடம் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அண்ணாதுரை மீண்டும் தன் மனைவிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் தான் தற்கொலை செய்யப் போவதாக கூறிவிட்டு போனை வைத்து விட்டார். இதனால் பதறிப் போன அவருடைய மனைவி வீட்டிற்கு சென்று பார்த்த போது அண்ணாதுரை தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி கதறி அழுதார். மேலும் இது குறித்த தகவலின் பேரில் எம்கேபி நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.