அசாம் மாநிலத்தில் பகன் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் செல்போன் திருடு போனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவத்தில் பலு கொவலா (27), டகு ஓரங் ஆகிய வாலிபர்கள் ஈடுபட்டதாக தகவல் பரவியது. இதனால் அந்த 2 வாலிபர்களையும் கிராமத்தினர் பிடித்து சிறை வைத்து கடுமையாக தாக்கினர்.

இதில் அந்த வாலிபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடனடியாக வாலிபர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பலு கொவலா இறந்தார். மற்றொரு வாலிபருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.