சென்னை ராயபுரம் பகுதியில் கணவன் மனைவி இருவரும் கட்டிட வேலை செய்து வரும் நிலையில் இவர்களுக்கு 15 வயதில் மகள் ஒருவர் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 11ஆம் வகுப்பு செல்கின்றார். வருகின்ற பத்தாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வீட்டிலிருந்த அவர் கடந்த மாதம் 30ஆம் தேதி தனது பெற்றோரிடம் செல்போன் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததால் விரக்தி அடைந்த மாணவி பெற்றோர் வேலைக்கு சென்ற நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பெற்றோர் மகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிறகு போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டாம் தேதி மாணவி வீட்டுக்கு திரும்பி உள்ளார். இது பற்றி போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் தனது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்றதாகவும் அதே மாவட்டம் ஒட்டம்பட்டியை சேர்ந்த வரதராஜன் என்பவரை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததும் அங்கு சென்ற போது வரதராஜ் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து வாலிபரை தேடி வருகின்றனர்.