தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் பகுதியில் 24 வயது உடைய வாலிபர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு தனது நண்பருடன் திருநெல்வேலியில் இருக்கும் ஹோட்டலுக்கு மது அருந்துவதற்காக சென்றுள்ளார். அவர்கள் 1600 ரூபாய்க்கு மது குடித்தனர். அந்த ஹோட்டல் நிர்வாகத்தினர் வரி 232 ரூபாய், சேவை கட்டணம் 80 ரூபாய் சேர்த்து மொத்தம் 1912 ரூபாய் வசூலித்துள்ளனர். அப்போது மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத்துறை ஆணையின்படி நுகர்வோரிடம் சேவை கட்டணம் வசூலிக்க கூடாது என்பதால் 80 ரூபாயை திரும்ப தருமாறு வாலிபர் கேட்டுள்ளார்.

ஆனால் ஹோட்டல் நிர்வாகத்தினர் 80 ரூபாயை கொடுக்க மறுத்ததால் பாதிக்கப்பட்ட வாலிபர் நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கிளாட்ஸ்டோன், உறுப்பினர் கனக சபாபதி ஆகியோர் சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகத்தினர் வாலிபருக்கு 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு, சேவை கட்டணம் 80 ரூபாய், வழக்கு செலவு தொகை 3 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.