
தெலுங்கு சினிமாவில் பழம்பெரும் நடிகராக இருப்பவர் மோகன் பாபு. இவருடைய மகன் மஞ்சு மனோஜ். இவருடைய மனைவி மோனிகா. இந்நிலையில் மோகன் பாபு தன் மருமகளும் மகனும் சேர்ந்து தன்னை சொத்துக்காக சேர்ந்து மிரட்டுவதாகவும் கொலை செய்து விடுவோம் என்று கூறுவதாகவும் தற்போது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது தெலுங்கு திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனக்கும் என்னுடைய சொத்துக்களுக்கும் பாதுகாப்பு இல்லாததால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கொடுத்த புகார் மனுவில், கடந்த ஞாயிற்றுக்கிழமை என்னுடைய மகன் மஞ்சு மனோஜ் சில சமூகவிரோதிகளுடன் சேர்ந்து என்னுடைய வீட்டுக்கு வந்து மிரட்டினான்.
இந்த நபர்கள் நான் வெளியே சென்றிருந்த நிலையில் வீடு திரும்புவதற்காக காத்திருந்ததாக கூறியதை கேட்டு அச்சமடைந்தேன். நான் நிரந்தரமாக என்னுடைய வீட்டை கைவிட வேண்டும் என்று அதாவது என்னுடைய சொத்துக்கள் முழுவதையும் எழுதிக் கொடுக்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள். எனக்கும் என் வீட்டில் இருப்பவர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள். மேலும் முன்னதாக மனோஜ் தன்னுடைய தந்தை தன் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்வதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்த நிலையில் தற்போது தந்தையும் மகன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.