அமெரிக்காவில் மிச்செலே ஒய் பீட்டர்ஸ் (47) என்பவர் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருடைய கணவருக்கு சமீபத்தில் 50-வது பிறந்தநாள் வந்த நிலையில் அதற்காக பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த பார்ட்டியில் கணவர் கலந்து கொண்ட நிலையில் அதனைப் புகழ்ந்து அவர் எதுவுமே தன் மனைவியிடம் கூறவில்லை. இதனால் மிச்செலே தன்னுடைய கணவர் மீது கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய கணவருக்கு சோடாவில் களைக்கொல்லி மருந்தை கலந்து கொடுத்துள்ளார். இதன் விளைவுகள் சிறிது நாட்களுக்கு பிறகு தெரியவந்துள்ளது.

அவருக்கு வாந்தி மற்றும் பேதி போன்ற உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில் தன் மனைவி மீது சந்தேகப்பட்டு சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளார். அப்போது தன்னுடைய மனைவி சோடாவில் களைக்கொல்லி மருந்தை கலந்தது தெரியவந்தது. அதன் பிறகு தனக்கு இருக்கும் பிரச்சினைகள் குறித்து மனைவியிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் உங்களுக்கு கொரோனா வந்திருக்கலாம் எனவே குழந்தைகளிடமிருந்து தள்ளி இருங்கள் என்று கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர் தன் புகாரில் தன் மனைவிக்கு வேறு யாருடனாவது தொடர்பு இருக்கலாம் அல்லது தன் பெயரில் போடப்பட்டுள்ள ரூ.4 கோடி பாலிசியை எடுப்பதற்காக இப்படி செய்திருக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மிச்செலேவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.