கன்னியாகுமரி மாவட்டம் தோவளை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மீது, வினிதா என்ற பெண்ணை கொலை செய்ததாக வழக்குப்பதிவானது. அதாவது கடந்த 2022 பிப்ரவரி 6ம் தேதி வீட்டுக்குள் நுழைந்து, 4.5 பவுன் நகைக்காக வினிதாவை அவர் கொலை செய்தார்.

இந்த வழக்கு, திருநல்வேலி மாவட்ட ஏழாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது. ஏற்கனவே தமிழ்நாட்டில் மூன்று கொலை வழக்குகளில் தொடர்புடைய ராஜேந்திரன், ஜாமீனில் வெளிவந்திருந்த நிலையில் இக்கொலையை செய்துள்ளார்.

ஏப்ரல் 10ஆம் தேதி நீதிமன்றம் ராஜேந்திரனை குற்றவாளி என அறிவித்தது. தண்டனை தொடர்பான விசாரணையின் போது, நீதிபதி “உங்களுக்குள் ஏதேனும் குற்ற உணர்ச்சி இருக்கிறதா?” என்ற கேள்விக்கு ராஜேந்திரன், “நான் தவறு செய்யவில்லை. எனது தூய்மையை மேல்நீதிமன்றங்கள் நிரூபிக்கும். என் 70 வயதான தாயை பார்த்துக்கொள்ள வேண்டும். ஏழை மக்களுக்கு இலவச சட்ட உதவி வழங்க நான் வக்கீலாக மாற விரும்புகிறேன். எனவே என்னை விடுவிக்க வேண்டும்” என உருக்கமாக பதிலளித்தார்.

ஆனால், அரசு வழக்கறிஞர் சலாஹுதீன், “இந்த வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டால், மீண்டும் ஜாமீனில் வெளியே வந்து மற்ற கொலைகளை செய்ய வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க மரணதண்டனை தேவை” என வலியுறுத்தினார்.

நீதிமன்றத்தில் ராஜேந்திரனின் சமூகப் பின்னணி, திருந்தும் சாத்தியக்கூறு, மனநிலை, புறக்கணிக்கப்பட்ட வாழ்க்கை, சிறைக்குள் நடத்தை, பழைய குற்ற வரலாறு உள்ளிட்ட 7 வகையான விரிவான அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தண்டனை அறிவிப்பு வியாழக்கிழமை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.