
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலைஞர் அரங்கத்தில் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நினைவு புகைப்பட கண்காட்சி பார்வையிட்டு பின் செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு பேசினார் , முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுடைய நூற்றாண்டு நினைவு வருகிற ஜூன் மாதம் மூன்றாம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகளின் காரணமாக ஆறாம் தேதி வரை தமிழகத்திலும் மற்ற இடங்களிலும் மூன்றாம் தேதி விழாவினை மிகப் பிரமாண்டமான வகையில், திட்டமிட்டபடி நடத்த இயலவில்லை.
ஆகையால் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இந்த ஆண்டு கலைஞருடைய நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கழகத் தோழர்கள் தலைவருடைய சிலைக்கு மாலை சூட்டி 50 ஆண்டு காலத்திற்கும் மேலாக கழகத்தினுடைய தலைவராக இருந்து கட்சியையும் சின்னத்தையும் காப்பாற்றி கொடுத்த ஒப்பற்ற தலைவர், இந்தியாவிலேயே தொடர்ந்து ஒரே சின்னத்தில் போட்டியிடும் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்கின்ற பெருமையை தேடிக் கொடுத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.
அவருக்கு அன்றைய தினம் அவருடைய இதயத்திலேயே நிரந்தரமாக குடியிருந்த கழக கொடியினை ஏற்றி வைத்து மகிழ்ச்சியோடு அன்றைக்கு விழாவை தொடங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனுடைய துவக்கமாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சொந்தமான இந்த அண்ணா அறிவாலயத்தில் அமைந்திருக்கின்ற கலைஞர் அரங்கத்திலேயே புகைப்பட கண்காட்சியை 30-ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை பொதுமக்களுடைய பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
கலைஞருடைய ஏறத்தாழ 80 ஆண்டு கால அரசியல் வரலாற்றை புகைப்படமாக இந்த கண்காட்சியிலேயே பார்க்கக்கூடிய வாய்ப்பு அமைந்திருக்கிறது. இதை பார்த்து விட்டு வருகிற எங்களைப் போன்றவர்கள் எல்லாம் கண்கலங்க கூடிய அளவிற்கு பழைய நினைவுகள் வருகின்றன. கலைஞர் ஆரம்ப காலத்தில் இயக்கத்திற்கு பணியாற்றியது முதல் இறுதி வரை இருக்கக்கூடிய பயணத்தின் உடைய முழு படங்களும் கண்காட்சியில் இருக்கிறது. என்று தெரிவித்துள்ளார்.