
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் மருத்துவர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் அவருடைய மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதையடுத்து சில மாதத்திற்கு முன்பு அரசு மருத்துவமனையிலிருந்து ஓய்வு பெற்ற அவர் கர்நாடக மாநிலத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணிபுரிந்தார். அங்கு இர்ஷானா(34) என்ற பெண்ணின் அறிமுகம் சில நபர்களால் அவருக்கு கிடைத்துள்ளது. இதனால் இர்ஷானாவுடன் பழகிய மருத்துவர் அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டுள்ளார். அதன்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து இர்ஷானாவின் சகோதரன் என்று அறிமுகமான ஒருவர் இருவரையும் குடியமர்த்த வீடு பார்ப்பதாக மருத்துவரிடம் ரூ.5 லட்சம் பணம் கேட்டுள்ளார். அதன்படி மருத்துவரும் அவருக்கு ரூ. 5 லட்சம் பணத்தை மசூதியின் முன்பு வைத்து கொடுத்துள்ளார். அதன்பின் இர்ஷானா சில நபர்களுடன் மருத்துவரின் செல்போன் மற்றும் லேப்டாப் போன்றவற்றை திருடிக் கொண்டு அங்கிருந்து மாயமாகியுள்ளார்.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மருத்துவர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த இர்ஷானா மற்றும் இந்த மோசடியில் ஈடுபட்ட 3 நபர்களையும் தேடி வந்தனர். இதில் தற்போது இர்ஷானா காவல்துறையினரின் தீவிர தேடுதலுக்கு பின்பு சிக்கியுள்ளார். அதன்பின் அவரை காவல்துறையினர் கோர்ட்டில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். மேலும் காவல்துறையினர் இர்ஷானாவிடம் 3 நபர்களை பற்றி விசாரணை நடத்தியதுடன் அவர்களைத் தேடி வருகின்றனர்.