
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை சாலையில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் வழக்கம் போல நர்சரி வகுப்பு மாணவ-மாணவிகள் மாலை 3:30 மணி அளவில் பள்ளி வேனில் வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் வேன் விஐபி நகர் தமிழ்நாடு ஹோட்டல் எதிரே கிருஷ்ணகிரி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென எதிரே வந்த டிராக்டர் மீது மோதியது. இதில் டிராக்டரில் வந்த பெண் தொழிலாளி விஜயா (45) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் வேனில் பயணித்த பள்ளி குழந்தைகள் பலத்த காயமடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் குழந்தைகளை மீட்டு அருகிலுள்ள கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே LKG மாணவர் அருணேஷ்(5) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் படுகாயம் அடைந்த மாணவர்களான சர்வேஷ்(7), காருண்யா(3), அனுஷ்கா(3), மணிஷ்(8) ஆகியோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பள்ளி வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் வேப்பன பள்ளியை அடுத்த பந்திக்குரியை சேர்ந்த சந்துரு (22). இவரும் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் மாணவ- மாணவிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சா. தினேஷ்குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.