
கோவையில் சுந்தராபுரம் அருகே செட்டிபாளையம் ரோடு – ஈச்சனாரி சாலை சந்திப்பில் உள்ள கட்டடப் பொருட்கள் விற்பனை கடையில் வேலை பார்த்து வந்த திண்டுக்கல்லை சேர்ந்த ஆறுமுகம் (30) என்பவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதமாகவே மினி லாரி டிரைவராக வேலை பார்த்து வந்த ஆறுமுகம், கடையின் மேல் தள அறையில் கேரளாவைச் சேர்ந்த ஷியாம் என்பவருடன் தங்கி இருந்தார். ஷியாம் சமீபத்தில் தான் வேலைக்கு சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
நேற்று இரவு இருவரும் சேர்ந்து மது அருந்திய நிலையில், ஷியாம் அதிக சத்தத்தில் டிவி பார்த்ததைப் பார்த்து ஆறுமுகம் சத்தத்தை குறைக்குமாறு கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. திடீரென ஷியாம், அங்கு கிடந்த காலி மது பாட்டிலை எடுத்து, ஆறுமுகத்தின் தலை மற்றும் மார்பில் அடித்துள்ளார். அதனால் ஆறுமுகம் அலறி துடித்ததால், அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கும் கடை உரிமையாளருக்கும் தகவல் அளித்தனர்.
உடனே ஆறுமுகம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை 3 மணிக்கு உயிரிழந்தார். இதுகுறித்து சுந்தராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய ஷியாமை தேடி வருகின்றனர். ஷியாம் மீது ஏற்கனவே சில வழக்குகள் இருப்பதாகவும், அவர் கைது செய்யப்பட்டால் கொலைக்கான உண்மையான காரணம் வெளியாகும் என போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த கொலை சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.