
ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் கடந்த 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு தமிழக வீரர் கூட அணியில் இடம்பெறாதது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழக வீரர் நடராஜன் ஐபிஎல் தொடரில் சிறப்பான முறையில் செயல்பட்ட போதிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் முன்னணி வீரர்கள் பலரும் தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர்.
இதேபோன்று நடப்பு ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற கொல்கத்தா அணியில் இடம்பெற்ற சுழற் பந்துவீச்சாளரான வருண் சக்கரவர்த்திக்கும் உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் உலகக்கோப்பை அணியில் வருண் சக்கரவர்த்தி இடம்பெறாதது குறித்து தற்போது அபிஷேக் நாயர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஒவ்வொரு வருடமும் வருண் சக்கரவர்த்தி சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறார்.
இருப்பினும் அவரிடம் தேர்வாளர்கள் பேட்டிங் மற்றும் பீல்டிங் இரண்டையும் மேம்படுத்த வேண்டும் என கூறி வருகிறார்கள். இதுதான் தேர்வு செய்யப்படுவதற்கான உறுதியான மனநிலையாக இருக்கிறது. விஜய் ஹசாரா தொடரில் ரன் எடுத்ததை வருண் சக்கரவர்த்தி எனக்கு அனுப்பி வைத்திருந்தார். இதனால் வீரர்களும் 3 துறைகளிலும் சிறப்பாக இருந்தால்தான் தேர்வாக முடியும் என்று நம்புகிறார்கள். அந்த வகையில் வருண் சக்கரவர்த்தி தன்னுடைய ஃபீல்டிங்கை சிறப்பான முறையில் மாற்றி வருகிறார். மேலும் வீரர்கள் தங்களிடம் 3 விஷயங்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பொழுது ஒரு துறையில் மட்டும் நீங்கள் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம் பிடிப்பது மிகவும் கடினம் என்று கூறியுள்ளார்.