
எலான் மஸ்க் டுவிட்டரை தன்னகப்படுத்தியதை அடுத்து மைக்ரோ பிளாக்கிங் தளம் தினமும் ஏதோ ஒரு மாற்றத்தை சந்தித்து வருகிறது. டுவிட்டரில் சரிபார்த்த கணக்கை (ப்ளு டிக் கணக்குகளை) வைத்திருப்பவர்களுக்கு மாதம் இனிமேல் குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும் என எலான் மஸ்க் முன்பே அறிவித்திருந்தார். தற்போது அச்சேவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் டுவிட்டர் புளூவை பயன்படுத்துவதற்கு மாதாந்திர சந்தாவாக இணையவழியில் பயன்படுத்த 650 ரூபாயும், செல்போன்களில் பயன்படுத்த மாதம் 900 ரூபாயும் செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புது வசதி இணையம், IOS மற்றும் ஆண்டிராய்டு என 3 தளங்களிலும் பயன்படுத்தலாம் எனவும் இச்சேவைகளை ஆண்டு சந்தாவாக 6,800 ரூபாய் செலுத்தி பெறமுடியும் எனவும் டுவிட்டர் அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக பயனர்கள் Twitter Blue tickக்கு ஒரு மாதத்துக்கு $19.99 ( இந்திய மதிப்பில் 1647.17 ரூபாய்) செலுத்தவேண்டி வரும் என்ற தகவல்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.