
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்ற போது அதிமுகவினர் கடும் அமளி செய்து அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர். அதாவது அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி மற்றும் கே.என் நேரு ஆகியோர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்திய நிலையில் அவருடைய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதால் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நாங்கள் 3 அமைச்சர்கள் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்திய போது எங்களுக்கு சபாநாயகர் பேசுவதற்கே அனுமதி கொடுக்கவில்லை. இந்த அமைச்சரவை மீது எங்களுக்கு நம்பிக்கை போய் விட்டது. நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம்.
எங்கள் கட்சி எங்கள் விருப்பம். நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் இவர்களுக்கு என்ன.? இவர்கள் ஏன் எரிச்சல் அடைகிறார்கள். திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. நாங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் கூட்டணி வைத்துள்ளதால் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். அமித்ஷா அதிமுக மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்றுதான் கூறினாரே தவிர கூட்டணி அரசு அமைக்கப்படும் என்று எந்த இடத்திலும் கூறவில்லை.
ஏற்கனவே தெளிவாக டெல்லிக்கு பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு எடப்பாடி பழனிச்சாமி என்று கூறிவிட்டார் என்றார். மேலும் முன்னதாக அமித்ஷா தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் அதிமுக மற்றும் பாஜக இணைந்து ஆட்சியமைக்கும் என்ற கூறிய நிலையில் தற்போது அதனை எடப்பாடி பழனிச்சாமி மறுத்துள்ளார்.