கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிரபல ஹோட்டலுக்கு ஒரு இளம் பெண்ணும் வாலிபரும் சாப்பிடுவதற்காக சென்றனர். அவர்கள் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டனர். திடீரென ஊழியர்களை அழைத்து பிரியாணியில் பூச்சி இருந்ததாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நடந்த சம்பவத்தை எல்லாம் அவர்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்தனர். மேலும் பூச்சி கிடந்ததால் அந்த பிரியாணிக்கு பணம் தர முடியாது என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். மேலும் அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டனர்.

இந்த நிலையில் கடை நிர்வாகத்தினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அந்த வாலிபரும் பெண்ணும் ஒரு பூச்சியை பிரியாணி தட்டில் எடுத்து போடும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அவர்கள் பிரியாணி தட்டை டேபிளுக்கு அடியில் கொண்டு செல்லும் காட்சிகளும், செல்போனில் போட்டோ எடுக்கும் காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதனால் கடை மீது அவதூறு பரப்பியதாக ஹோட்டல் நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.