வேலூர் மாவட்டம் அம்மாணங்குட்டை பகுதியில் எரிவாயு மின் தகன மையம் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான உடல்களுக்கு இறுதி சடங்கு நடக்கும். இந்த நிலையில் 37 வயதுடைய இளம்பெண் ஒருவரின் உடலை தகனம் செய்வதற்காக உறவினர்கள் அம்மாணங்குட்டை பகுதியில் உள்ள மையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு இளம் பெண்ணின் உடலை எரிப்பதற்காக தகன மேடையில் வைத்து உள்ளே அனுப்பிவிட்டு உறவினர்கள் வெளியே அமர்ந்து காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் தகனமேடை எரிவாயு புகை ஏதும் வராததால் இளம்பெண்ணின் உறவினர்கள் அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் சென்று கேட்டபோது அஸ்தியை பிறகு வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

அதற்கு அந்தப் பெண்ணின் உறவினர்கள் எவ்வளவு நேரம் ஆனாலும் காத்திருந்து அஸ்தியை வாங்கி செல்வதாக கூறினர். பின்பு சில மணி நேர காத்திருப்பிற்குப் பின்பு பெண்ணின் உறவினர்கள் உள்ளே சென்று கேட்டபோது நாளை வந்து அஸ்தியை வாங்கிக் கொள்ளுமாறு ஊழியர்கள் கூறினர்.

இதனால் கோபமடைந்த பெண்ணின் உறவினர்கள் அந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்‌. அதே சமயம் ஒரு மூதாட்டியின் உடல் தகனம் செய்வதற்காக கொண்டு வரப்பட்டது. அப்போது மூதாட்டியின் உடலை தகன மேடையில் வைத்து கொண்டு செல்லும்போது பெண்ணின் உறவினர்களும் உடன் சென்று பார்த்தனர்.

அங்கு எரிப்பதற்காக உள்ளே அனுப்பிய பெண்ணின் உடல் ஒரு அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ஏன் உடலை தனியாக வைத்துள்ளீர்கள் என ஊழியர்களிடம் கேட்டபோது, கியாஸ் இல்லை. மண்ணெண்னை இல்லை. விறகு பயன்படுத்தி தான் எரிக்க வேண்டும் என கூறினர்.

அதனால் பெண்ணின் உறவினர்கள் ஆத்திரமடைந்து தகராறு செய்தனர். இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணின் உறவினர்கள் தகன மையத்தின் அறையை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு போது உறவினர்கள் சாவியை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பின்பு மாநகர சுகாதார அலுவலர் உதவியுடன் பெண்ணின் உடலை மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்று தகனம் செய்தனர். இது குறித்து மக்கள் சிலர் கூறும்போது, ஏன் பெண்ணின் உடலை எரிக்காமல் வெளியே எடுத்து வைத்தனர்? இரு உடல்களையும் ஒன்றாக வைத்து எரிக்க முடிவு செய்தார்களா என சந்தேகபடுவதாகவும், மேலும் பல மாதங்களாக பெட்ரோல் மண்ணெண்னையை பயன்படுத்தி தான் உடல்கள் தகனம் செய்யப்படுவதாகவும், இறந்தவர்களின் அஸ்தி சம்பந்தப்பட்ட உறவினருக்கு தான் வழங்குகிறார்களா? என்பது குறித்து சந்தேகப்படுவதாக கூறினர்.