ஆவடி அடுத்த அண்ணாமலை நகர் பிள்ளையார் கோவில் தெருவில் பிரகாஷ் என்பவர் வசித்து வரும் நிலையில் அந்த பகுதியில் காய்கறி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றார். இவருக்கு சத்யா என்ற மனைவியும், தீபக் என்ற மகனும் ஹரிணி என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் பிரகாஷுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மதியம் பிரகாஷ் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்த போது இது தொடர்பாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த சத்தியா வீட்டின் படுக்கை அறைக்குள் சென்று கதவை உள் தப்பால் போட்டுக் கொண்டு மின்விசிறியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் வீட்டின் ஹாலில் மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார். தம்பதி இருவரும் நீண்ட நேரம் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே நேரத்தில் கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்டதால் அவர்களுடைய குழந்தைகள் இருவரும் பெற்றோரை இழந்து அனாதையாக நிற்பதை பார்க்க பரிதாபமாக இருந்தது.