
சென்னை வளசரவாக்கம் வள்ளுவர் சாலையில் பிரகதீஸ்வரன் (48), சந்தான பிரியா எனும் தம்பதியினர் வசித்து வருகின்றனர். பிரகதீஸ்வரன் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் அஸ்வந்தினி (21), ஆனந்தினி (18) என்று 2 மகள்கள் உள்ளனர்.
இதில் அஸ்வந்தினி ராமபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். அவரது தங்கை ஆனந்தினிக்கு வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்ததை தொடர்ந்து அவரை கல்லூரி விடுதியில் சேர்க்கும் முயற்சியில் அவர்களது பெற்றோர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதையறிந்த அஸ்வந்தினி கோபத்துடன், தன் பெற்றோர்களிடம் “தங்கையை மட்டும் விடுதியில் சேர்க்க ஏற்பாடு செய்கிறீர்கள். நானும் விடுதியில் தங்கி படிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்”. இதற்கு தனது பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால், வேதனை அடைந்த அஸ்வந்தினி நேற்று முன்தினம் இரவில் தனது வீட்டின் 2-வது மாடியில் உள்ள முகப்பு சுவரில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள் அஸ்வந்தினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதோடு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.