
திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் அமைந்துள்ள குறுக்குத்துறை முருகன் கோவிலில் சிறப்பு பட்டயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலின் மீது மக்கள் கொண்ட பக்தியால் நேர்த்திக்கடனாக விலை உயர்ந்த பொருட்களை நன்கொடையாக செலுத்தி வந்தனர். அந்த வகையில் வைரம் பதித்த தங்கவேல் ஒன்று நெல்லை குறுக்குத்துறை முருகன் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. அந்த வேல் முக்கிய விழாக்காலங்களில் மட்டுமே பூஜை செய்யப்படும்.
மேலும் வைரம் பதித்த தங்கவேல் குறித்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி மீனா ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். அந்த ஆராய்ச்சியில் வேல் குறித்து முக்கியமான தகவல்கள் வெளியாகி உள்ளது. மாணவி மீனா மேற்கொண்ட ஆராய்ச்சியில் செப்பு பட்டயம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த பட்டயத்தில் தங்கவேல் பற்றிய விவரங்கள் இருந்தன. அதாவது வருகிற மார்ச் 31ம் தேதியுடன் தங்கவேல் 75 ஆவது ஆண்டை தொடுவதாக தகவல் இருந்தது. இந்த செப்பேடு 1950 ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதியில் வெளியிடப்பட்டது ஆகும்.
அந்த பட்டயத்தின் நீளம் 10.5 சென்டிமீட்டர், அகலம் 31.5 சென்டிமீட்டர். மேலும் இந்த கோயிலுக்கு பழைய வைரம், பழைய பச்சை பழைய சிவப்பு பதித்த தங்கவேல் ஒன்றும் ,பழைய பச்சை பழைய சிவப்பு பதித்த சிவலிங்க கெவுடு ஒன்றும், நற்பவள மாலையில் சிவப்பதக்கம் கோர்த்த வேல் ஒன்றும் வழங்கப்பட்டது. அதனை டி.எஸ்.சிதம்பரம், அவரது மனைவி கனகசங்கர வடிவு அம்மாள் ஆகியோர் நன்கொடையாக அளித்தனர் என சிறப்பு பட்டயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.