கூடலூர் மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியில் தேக்கடி வனப்பகுதி அமைந்துள்ளது.  இப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக அங்குள்ள அணைப் பகுதியை ஒட்டி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை தண்ணீர் குடிப்பதற்காக யானை ஒன்று முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் ஷட்டர் பகுதி அருகே நின்று கொண்டிருந்தது.  திடீரென நிலை தடுமாறிய யானை தவறி ஆற்றின் உள்ளே விழுந்தது.

ஆற்றின் உள்ளே சிக்கிக்கொண்ட யானை வெளியே வர இயலாமல் சத்தம் போட்டது.  இந்த சத்தத்தை கேட்ட அங்குள்ள வனத்துறையினர் யானையை சென்று பார்த்தனர்.  இவர்கள் யானையை மீட்பதற்காக புலிகள் சரணாலய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.  இதைத்தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக அரசு பகுதிக்கு குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 1200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் யானையை காப்பாற்றுவதற்காக அந்த தண்ணீர் முழுவதும் நிறுத்தப்பட்டது.  அதன்பின் வனத்துறையினர் யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு தொடர்ந்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானையை காப்பாற்றினர்.  மேலும் இதைத்தொடர்ந்து யானை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்கப்பட்டது.