கேரளா மாநிலத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் கடத்தி வரப்படுவதாகவும், அதனை மாணவ, மாணவிகளுக்கு விற்பனை செய்வதாகவும் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் முக்கிய இடங்களில் சோதனை செய்தனர். அப்போது ரயிவே நிலையம் அருகே சந்தேகம் படும்படியாக ஒரு வாலிபர் நின்றுகொண்டிருந்தார். அந்த வாலிபரை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர்.

அந்த விசாரணையில் அவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அஜிபர் ஷேக் (26) என்பது தெரிய வந்தது. இவர் அங்கமாலியில் உள்ள கறி மசாலா கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். பின்பு அங்கிருந்து விலகி, ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி கேரளாவுக்கு கொண்டு வந்துள்ளார்.

இதனை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விற்றதும்  தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதில் 8 பைகளில் 17 கிலோ இருந்தது தெரியவந்தது. மேலும் காவல்துறையினர் அஜிபர் ஷேக் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இவருக்கு உடந்தையாக இருப்பவர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.