
மதுரை மாவட்டத்தில் ஏராளமான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்ளுக்கு மத்தியில் கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வருகின்றது. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன், பெரியார் பேருந்து நிலையத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வைகை ஆற்றிலுள்ள கல் பாலத்தில் கடந்த 16-ஆம் தேதி இரவு பள்ளி மாணவர் ஒருவரை 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் செல்லூர் பகுதியை சேர்ந்த மாணவனை தாக்கியது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.