திருவனந்தபுரத்தில் ரயிலில் எம்டிஎம்ஏ போதைப்பொருளுடன் வந்த மலையாள சினிமா உதவி இயக்குநர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா முழுவதும் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வரும் நிலையில், போலீசார் சிறப்பு புலனாய்வு படையுடன் இணைந்து தீவிர சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில், காசர்கோட்டிலிருந்து திருவனந்தபுரம் வரும் ரயிலில் ஒருவர் போதைப்பொருள் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, போலீசார் ரயில்நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

சந்தேகத்திற்கிடமான ஒருவரை நோக்கி போலீசார் சென்றதும் அவர் தப்பிக்க ஓடியதாக கூறப்படுகிறது. ஆனால் போலீசார் விரட்டிச் சென்று அவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் நடத்திய சோதனையில், அவரது பேன்ட் பாக்கெட்டில் இருந்து 2.08 கிராம் எம்டிஎம்ஏ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

விசாரணையில், கைது செய்யப்பட்டவர் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞம் பகுதியைச் சேர்ந்த முகம்மது ஜசீம் (வயது 35) என்பதும், அவர் மலையாள சினிமாவில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவுபடி அவரை சிறையில் அடைத்தனர்.