தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் நிலையை குறித்து பள்ளி கல்வித்துறை ஆய்வு நடத்தியதில் மாவட்ட அளவில் தயாரிக்கப்படும் காலாண்டு தேர்வு வினாத்தாள்களில் பாடநூல்களில் உள்ள வினாக்கள் மட்டுமே கேட்கப்படுகின்றன. அதனால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டதால் இதற்கு தீர்வு காணும் விதமாக காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் பொது வினாத்தாள் நடைமுறையை கொண்டு வர பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது.

இந்நிலையில் நடப்பு ஆண்டில் பொது வினாத்தாள் முறை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொது வினாத்தாள் முறை காலாண்டு தேர்வு முதல் அமலுக்கு வருகிறது. அதற்கான தேர்வு கால அட்டவணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. ஆறு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 19 முதல் 27 வரை காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வுகள் நடைபெறும். 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 15 முதல் 27ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.