
தமிழகத்தில் முதுநிலை மருத்துவ படிப்புகளும் உயர் சிறப்பு படிப்புகளும் நீட் தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. முதுநிலை மருத்துவ படிப்புகளை பொருத்தவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 50% மாநில ஒதுக்கீட்டு இடங்களில் அரசு மருத்துவர்களுக்கு 50% உள் ஒதுக்கீடாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த நடைமுறையை தொடர இயலவில்லை.
இந்த நிலையில் MD, MS முதுநிலை மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 2024-25 கல்வியாண்டில் பொது, குழந்தைகள் நல மருத்துவம் மற்றும் மகப்பேறு உள்ளிட்ட ஒன்பது துறைகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. பிற துறைகளுக்கான இட ஒதுக்கீட்டை ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பதாக கூறியுள்ள அரசு 50 சதவீதம் இட ஒதுக்கீடு பற்றி ஆண்டுதோறும் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.