தமிழக பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் நேற்று ஆளுநர் ரவியை நேரில் சந்தித்து மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி புகார் மனு கொடுத்தனர். அதன்பிறகு தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுகிறது. இந்த வழக்கில் நாங்கள் இன்னொரு நபர் இருப்பதாக சந்தேகப்படும் நிலையில் அதனை மூடி மறைக்க பார்க்கிறார்கள். அந்த இன்னொரு நபர் யார்.? அவர் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.? என்ற விவரம் கண்டிப்பாக எங்களுக்கு தெரிய வேண்டும். தமிழகத்தில் திமுகவினரால் பெண்கள் பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்படுகிறார்கள்.

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் இந்த விவகாரத்தில் இன்னும் வாயை திறக்கவில்லை. விசாரணை முடிவடைந்த பிறகு அந்த சார் யார் என்பது தெரியவரும் என்று கனிமொழி எம்பி கூறுகிறார். ஆனால் விசாரணை சரியான முறையில் நடக்காது என்று நாங்கள் பயப்படுகிறோம். ஏனெனில் திராவிட மாடல் அரசு குற்றவாளிகளுக்கு உறுதுணையாக இருக்கும் நிலையில் போராடும் பெண் தலைவர்களை கைது செய்துவிட்டு குற்றவாளிகளை சுதந்திரமாக வெளியே நடமாட விடுகிறார்கள். சிபிஐ விசாரணை வந்தால் மட்டும் தான் இந்த வழக்கில் உண்மை வெளிவரும். மேலும் இதனால் தான் நாங்கள் ஆளுநரை சந்தித்து சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தியுள்ளோம் என்று கூறினார்.