மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று மற்றும் நாளை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவையில் உள்ள சில பகுதிகளில் அதிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் நெல்லை மாவட்டம் மலைப்பகுதிகளில் இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் வருகின்ற 28ஆம் தேதி மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் ஆகிய பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் அன்றைய தினம் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.