
தமிழகத்தில் வளிமண்டல மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னை, கன்னியாகுமரி, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக வேளச்சேரி, பள்ளிக்கரணை, கோடம்பாக்கம், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், எழும்பூர், கோயம்பேடு, மதுரவாயில் மற்றும் வானகரம் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது.