
தமிழகத்தில் பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில் பின்னர் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுவிழந்துள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கிய நிலையில் புயல் கரையை கடந்த பின்னர் அது வடக்கு நோக்கி நகர்ந்து வலுவிழந்தது. இந்த நிலையில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இயல்பை விட அதிக மழைப்பொழிவு இருக்கிறது. அதன் பிறகு ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல்வேறு மாவட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் சிரமத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று திருப்பத்தூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இனி படிப்படியாக இயல்பு நிலை திரும்பும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.