சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன் பிறகு இன்று தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

வருகிற 24-ம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை என எதுவுமில்லை. மேலும் நேற்று இரவு முதல் திருவாரூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.