தமிழகத்தில் மேற்கு திசை காற்றின்  வேக மாறுபாடு காரணமாக அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் ஜூலை மாதம் 4-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

அதன் பிறகு அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும். இந்நிலையில் இன்று முதல் ஜூலை 2-ம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் அன்றைய தினம் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.