தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் இன்று தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்கள் நிறைய உள்ளன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. கொலைகளும் கொள்ளைகளும் இல்லாத நாட்களே இல்லை என்ற சூழல்தான் தற்போது உள்ளது. திரும்பிய பக்கமெல்லாம் கஞ்சாவும் போதைப் பொருட்களும் கட்டுப்பாடு இன்றி விற்பனை செய்யப்படுகின்றன. சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வரக்கூடிய பெண்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் குழந்தைகள் ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதனை தடுக்கவும் பொதுமக்கள் அச்சம் இல்லாமல் நடமாடவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்காத காவல்துறையினர் திமுகவினரின் கைபாவையாக மாறி பாமகவினரை பழிவாங்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம். தமிழகத்தில் காவல்துறை திமுகவின் ஏவல் துறையாக இன்று மாறிவிடக்கூடாது. பாமக கட்சியினர் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதன் மூலமாக பாமகவை முடக்கி விடலாம் என்று முதல்வர் நினைத்தால் அதில் அவருக்கு ஏமாற்றம் மட்டும் தான் பரிசாக கிடைக்கும். தமிழ்நாட்டில் சமூக நீதியை நிலை நாட்டுவதில் முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.