தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி அமைக்கும் என்று கூறப்படும் நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷா அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்கிறார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது, அமித்ஷா சொல்லுவது வேடிக்கையாக இருக்கிறது. அவர் சொல்லுவது மற்ற மாநிலங்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஆனால் அது ஒருபோதும் தமிழ்நாட்டில் நடக்காது என்பது அவருக்கே தெரியும்.

தமிழகத்தில் தற்போது இரண்டாம் இடத்திற்கு தான் போட்டி நடைபெறுகிறது. இன்னும் அதிமுக ஒரு நிலையான அணியை உருவாக்காத நிலையில் பாஜகவும் ஒரு நிலையான அணியை இதுவரை உருவாக்கவில்லை. புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜயும் எந்த நிலைப்பாடு இல்லாமல் பேசி வருகிறார். அவர் பொதுக்குழு கூட்டத்தில் பேசியதை பார்க்கும்போது அதிமுகவை விட நான்தான் பலமானவன் என்று கூறுவது போல் இருக்கிறது. இதை வைத்து பார்க்கும் போது இரண்டாம் இடத்திற்கு தான் விஜய் போட்டி போடுகிறார். மேலும் தற்போது தமிழ்நாட்டில் பாஜக, அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் ஆகிய மூன்று கட்சிகளும் இரண்டாம் இடத்திற்கு தான் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.