இந்தியாவில் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்றால் நீட் தேர்வு கட்டாயம் எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இந்த நீட் தேர்வில் மத்திய அரசின் பாடத்திட்டங்கள் மட்டுமே இடம்பெறுவதாக தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி உச்சநீதிமன்றம் வரை சென்று நீதி கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழகத்தில் பல போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறியது.

அதன்படி சட்டமன்றத்தில் நீட்விலக்கு மசோதாவை இயற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பிய போது ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். இந்நிலையில் தமிழக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தற்போது ஒரு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் நீட் தேர்வு என்பது கூட்டாட்சி கொள்கைக்கு எதிரானதாகவும் கூட்டாட்சி கொள்கையே மீறுவதாகவும் இருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நீட் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு மாநில அரசை கட்டுப்படுத்தாது என அறிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.