தமிழகத்தில் படித்த பட்டதாரி இளைஞர்கள் வேளாண் சார்ந்த தொழிலை தொடங்கினால் அவர்களுக்கு மானியம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வேளாண் துறை உற்பத்தி கமிஷனர் மற்றும் முதன்மை செயலாளர் அபூர்வா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் படித்த இளைஞர்கள் விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்டிருக்க வேண்டும் என்பதாலும் வேளாண்மை சார்ந்த தொழிலை தொடங்க அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதாலும் மானியம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இதற்காக தமிழக அரசு சுமார் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில் படித்த பட்டதாரி இளைஞர்கள் வேளாண் சார்ந்த தொழிலை தொடங்க ஆர்வமாக முன் வந்தால் அவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை அரசு சார்பில் மானியம் வழங்கப்படும்.

முதற்கட்டமாக இந்த வருடம் 100 இளைஞர்களுக்கு வங்கி கடனுடன் அரசு சார்பில் ஒரு லட்சம் மானியம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயன் பெற 21 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதோடு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்க கூடாது. விவசாயம் செய்பவர்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் ஒரு பட்டதாரி மட்டுமே பயன்பெற முடியும். இந்த திட்டத்தில் மானியம் பெற விரும்புபவர்கள் வட்டார வேளாண்மை அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை வேளாண்மை துறை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.