
சிவகங்கை மாவட்டத்திலுள்ள சாமியார் பட்டி பகுதியில் பிரவீன் குமார் (27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திமுக கட்சியின் விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் துணைத்தலைவராக இருந்தார். இவர் ரியல் எஸ்டேட் மற்றும் காண்ட்ராக்ட் தொழில் செய்து வந்தார்.
இவர் நேற்று சாமியார் பட்டி பகுதியில் உள்ள தன்னுடைய தோப்பில் இருந்தார். அப்போது மர்ம கும்பல் சிலர் பைக்கில் வந்து நிலையில் திடீரென அவர்கள் பிரவீனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவருடைய அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக பிரவீனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே பிரவீன் உயிரிழந்தார். இதனால் கோபத்தில் உறவினர்கள் சிவகங்கை-மானாமதுரை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய விக்கி என்ற கருணாகரன் (20), பிரபாகரன் (19), குரு (21) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொலைக்கான காரணம் குறித்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.