தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகள் பெறுவதற்கு 2 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திரிந்த நிலையில் காலதாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு மகளிர் உரிமைத்தொகை வழங்குவதால் தான் புதிய ரேஷன் அட்டைகள் வழங்காமல் அரசு காலம் தாழ்த்துவதாக பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உட்பட எதிர்க்கட்சிகள் பலரும் குற்றம் சாட்டினர். இந்நிலையில் புதிய ரேஷன் அட்டைகள் வழங்குவது தொடர்பாக தற்போது அமைச்சர் சக்கரா பாணி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகள் வழங்குவதில் எந்தவித தாமதமும் இல்லை எனவும், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 15.94 லட்சம் பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். அதன் பிறகு புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களில் 24,657 விண்ணப்பங்களுக்கு அச்சடிக்கப்பட்ட ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது எனவும் மீதமுள்ளவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றும் கூறினார். மேலும் மின்னணு ஸ்மார்ட் கார்டுகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருவதால் விரைவில் மீதமுள்ளவர்களுக்கும் புதிய அட்டைகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.