
தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க்கிழமைகளில் பாதுகாப்புத் திட்ட முகாம் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் அந்த குழந்தையின் பெயரில் ஐம்பதாயிரம் ரூபாய் முதலீடு செய்ய படும்.
இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் 25 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தமாக 50000 முதலீடு செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தில் பயன் பெறுவதற்கு குழந்தை பிறந்து இரண்டு வயதுக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும் எனவும் பெற்றோருக்கு கட்டாயமாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும் என்றும் ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் அரசு அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் ஆண் குழந்தை இருக்கும் குடும்பத்திற்கு இந்த திட்டத்தின் பலன்கள் எதுவும் கிடைக்காது. மேலும் முதலீடு செய்யப்பட்ட தொகை குழந்தை 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் அதற்கான வட்டியுடன் சேர்த்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.