
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த நிலையில் பாகிஸ்தானியர்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வருகிற 27ஆம் தேதி வரை தான் ஏற்கனவே தங்கியுள்ள பாகிஸ்தானியர்களின் விசா செல்லுபடி ஆகும். அதன் பிறகு மருத்துவ காரணங்களுக்காக தங்கி இருப்பவர்களுக்கு வருகிற 29ஆம் தேதி வரை விசா செல்லுபடி ஆகும்.
அதற்குள் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். சற்று நேரத்திற்கு முன்பாக உள்துறை மந்திரி அமித்ஷா அனைத்து மாநில முதல்வர்களுடனும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். அந்த வகையில் தமிழ்நாட்டிலும் பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் சென்னையில் ஏராளமானோர் மருத்துவ காரணங்களுக்காக வந்திருப்பது தெரிய வந்துள்ளது.
அதாவது அந்த நாட்டிலிருந்து மருத்துவ விசா பெற்று சென்னைக்கு தான் ஏராளமான பாகிஸ்தானியர்கள் வந்துள்ளனர். அடுத்தபடியாக வேலூரில் அதிகமாக இருப்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரையும் 29ஆம் தேதிக்குள் வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் 200 பாகிஸ்தானியர்கள் தங்கி இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அவர்களை உடனடியாக வெளியேற்றும் நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.