
திமுக கட்சியின் எம்.பி டிஆர் பாலு தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு வெறும் 1000 ரூபாய் தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். அதாவது ரயில்வே திட்டங்களுக்கான பிங்க் புத்தகம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே பட்ஜெட்டில் ஏமாற்றிய மத்திய அரசு ரயில்வே திட்டங்கள் மூலமாக மீண்டும் ஏமாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதன் பிறகு பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்த நிலையில் தற்போது தமிழர்களின் முதுகில் குத்திவிட்டார்கள். ரயில்வே திட்டங்களுக்கான அறிவிப்புகள் 80 சதவீத மக்களுக்கு எந்தவித பயனும் இல்லாமல் பணக்காரர்களுக்கு மட்டுமே நன்மை அளிக்கும் விதமாக இருக்கிறது
தமிழ்நாட்டில் இரட்டை பாதை திட்டங்களுக்கு தேர்தலுக்கு முன்பு 2214 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது 1928 கோடியாக நிதி குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட நிதி பாதியாக குறைக்கப்பட்டதோடு முக்கிய ரயில்வே திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். அதாவது திருப்பெரும்புதூர்-கூடுவாஞ்சேரி-இருங்காட்டுக்கோட்டை-ஆவடி வழித்தடத்தில் முன்னதாக 25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் தற்போது வெறும் ஆயிரம் ரூபாய் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று மதுரை-அருப்புக்கோட்டை-தூத்துக்குடி ஆகிய வழித்தடங்களில் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அது வெறும் 18 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படி பல திட்டங்களுக்கான நிதிகளை பாதியாக குறைத்து மத்திய அரசு தமிழர்களை ஏமாற்றி முதுகில் குத்திவிட்டார்கள் என்று ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.